சமூக ஊடகப் போர்

சமூக ஊடகப் போர்
Published on

தமிழ்நாட்டில் உள்ளடங்கி இருக்கும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர். பட்டன்போனை மட்டுமே கையாளத் தெரிந்தவர். இன்று அவர் பெயரில் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வரை கணக்குகள் உள்ளன. அவரது அன்றாட நடைமுறைகள், விழாக்கள் எல்லாம் அவற்றில் பகிரப்படுகின்றன. தன்னைச் சுற்றிலும் நடக்கும் இந்த விஷயங்களுக்காக அவர் ஓர்  ‘அட்மின்' குழு வைத்திருக்கிறார். ‘ காலத்துக்கு ஏற்ப நாம மாறணும், எனக்குத் தெரியாட்டி என்ன? தெரிஞ்சவங்களை அருகில் வெச்சிக்கிட வேண்டியதுதான்,' என்கிறார் அந்த தேர்ந்த அரசியல்வாதி. அன்றாடம் தலைமைக்கழகத்தில் இருந்து வழங்கப்படும் அறிக்கைகளும் கருத்துகளும் அவரது பக்கங்களில் சிரத்தையுடன் பகிரப்படுகின்றன.

தற்போதைய சூழலில் தேர்தல் பிரசார அணுகுமுறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் மலைக்கவைக்கின்றன. நகரங்களைத் தாண்டி மாவட்ட, வட்ட, கிளைக்கழகங்கள் வரை கையடக்க ஸ்மார்ட்போன்கள் தான் அரசியல் ஆயுதங்களாக இந்த சட்டமன்றத் தேர்தலில் உருவெடுக்க உள்ளன.

2016 சட்டமன்றத் தேர்தலின்போதே பிரசார உத்திகள் கார்ப்பரேட் கூட்டங்கள் போல் மாறத் தொடங்கிவிட்டன. திமுக சார்பில் நமக்கு நாமே என முக ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்களும்

நிகழ்ச்சிகளும் முறைப்படுத்தப்பட்டவையாக இருந்தன. பாமக சார்பில் அன்புமணியை முன்னிலைப்படுத்தி நடந்த நிகழ்ச்சிகளும் நறுக்கிவைத்ததுபோல் சீராக அமைந்தன. ‘‘எவ்வளவுதான் இப்படி நிகழ்ச்சிகளை முறைப்படுத்தினாலும் ஆட்சி அமைத்தது என்னவோ, அதிமுகதான்! வாக்குகளை அதிகமாகப் பெறுவதற்கான  ‘ஸ்பார்க்' மிஸ் ஆனதுதான் காரணம்! அத்துடன் களச்சூழலை இந்த பிரசாரங்களால் மாற்றி அமைக்கமுடியுமா என்பதும் கேள்விக்குறி ஆனது!'' என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

இப்போது அதிமுக தரப்பிலும் இதுபோன்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு இணையதள, சமூக ஊடக அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், போன்றவர்கள் சமூக ஊடகங்களில் சிறப்பாக இயங்குகின்றனர். அவர்களின் கருத்துப்பகிர்வுகளும் எல்லா தரப்பாலும் கவனிக்கப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு கடைசிவரை ட்விட்டர் அக்கவுண்ட் கூடக் கிடையாது என்ற நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டிவிட்டர் அக்கௌண்ட் மிகச்சிறப்பாக இயங்குகிறது. எஸ்.வி.சேகர் வீட்டுக்குப் பால் பாக்கெட் போட்டது முதல் சிரம திசையில் இருப்பவர்களின் கோரிக்கைகளை ஏற்பதுவரை செயல்பாடுகளுக்குப் பஞ்சம் இல்லை.

திமுகவில் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுக்க பிரஷாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதுபோல், அதிமுக தரப்பில் முன்பு திமுகவுக்குப் பணிபுரிந்த சுனில்குமார் என்பவரின் ஓஎம்ஜி நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இணையதள பிரசாரங்களை கட்டமைக்க சர்வதேச நிறுவனம் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அது தன் பணிகளை உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ளது. இந்நிறுவன ஆட்கள் ஆளுங்கட்சி ஆதரவு தொலைக்காட்சி அலுவலகத்திலேயே அமர்ந்து இந்த பணிகளை மேற்கொள்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான காணொளிகள், தகவல்களை இத்தொலைக்காட்சியிலிருந்தே பெற்றுக்கொள்கிறார்கள். ஆளுங்கட்சியின் சாதனைகளை முன்வைத்தல், எதிர்தரப்பை கிண்டல் செய்யும் வீடியோக்கள், மீம்ஸ்கள் போன்றவற்றைத் தயாரிப்பது, பரப்புவது போன்றவற்றை தொழில்முறையாகவே செய்ய ஆரம்பித்து பரப்புகிறார்கள். தீயசக்தி என்று திமுகவை தாக்குவதில் இருந்து எடப்பாடிபற்றி பாசிட்டிவாக செய்திகள் கொண்டுவருவது எல்லாம் இங்கே உருவாகிறது!

இதற்கு சற்றும் சளைக்காமல் திமுக தரப்பிலும் வேலை நடக்கிறது. திமுக பிரமுகர்கள் பலர் ஏற்கெனவே சமூக ஊடகங்களில் தீயாய் இயங்குகிறார்கள். பிரசாந்த் கிஷோர் வருகையைத்  தொடர்ந்து ஒன்றிணைவோம் வா திட்ட அமலாக்கம் ஓரளவுக்கு கொரோனா சமயத்தில் கட்சிக்கு நற்பெயர் ஈட்டித் தந்திருப்பதாக அக்கட்சியினர் நம்புகிறார்கள். ஆன்லைன் வழியாக வாக்காளர் சேர்ப்பு முயற்சியும் பிகேவின்  ‘ஐபேக்' நிறுவனம் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. கட்சிக்கு வெளியில் உள்ள அமைப்பால் கட்சியின் தேர்தல் பிரசாரம்

திட்டமிடப்படுவது சரியா என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்நிறுவனம் அதற்குள்ளாகவே தொகுதிகளுக்கு சரியான வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை அலசி அறிக்கை அளித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

பிகேவின் நிறுவனம் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் எம்கேஎஸ் அலுவலகம் என்று ஓர் அலுவலகம் மு.க.ஸ்டாலினுடைய சமூக வலைதளப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பத்திரிகையாளர் ஒருவர் முன்னின்று இதன் செயல்பாடுகளை சில ஆண்டுகளாகச் செய்துவருகிறார். அவரது அணியினர் முக ஸ்டாலின் நிகழ்வுகள், அவரது கருத்துகள், அறிக்கைகளைப் பரப்பும் பணியில் உள்ளனர்.

திமுக வில் இன்னொரு சக்தியாக இருப்பவர் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. அவரது சமூக வலைத்தளச் செயல்பாடுகள் துடிப்புடன் இளைஞர்களை ஈர்க்கும்வண்ணம் உள்ளன. இதன் பின்னணியிலும் ஒரு குழு இயங்குகிறது. அத்துடன் மூத்த பத்திரிகையாளர் ஒருவரும், அதிமுக, பாஜக எதிர்நிலைப்பாடு கொண்டுள்ள சில பத்திரிகையாளர்களும் ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

இது அல்லாமல் தகவல் தொழில்நுட்ப அணி திமுகவில் வலுவாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் பல விஷயங்களின் பின்னால் இவர்கள் இருக்கிறார்கள்.

காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், விசிக, பாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் சும்மா இல்லை. இவற்றிலும் தீவிரமான பரப்புரை அணியினர் இணையத்தில் இரண்டில் ஒன்று பார்த்துவருகிறார்கள்.

எல்லா கட்சிகளுமே வாட்ஸ் அப் குழுக்களாக தம் நிர்வாகிகளை இணைத்துள்ளன. எனவே ஒரே பொத்தானை அமுக்கினால் அனைவரின் கைபேசிக்கும் தகவல்கள் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. இதில் பெருத்த அபாயம் தர இருப்பவை பொய்ச்செய்திகள்தான்!

‘‘முன்பெல்லாம் இரவு மேடை ஏறும் கழகப் பேச்சாளர்களில் ஆபாச அர்ச்சனைக்கு என்றே புகழ்பெற்ற பேச்சாளர்கள் இருப்பர். அவர்கள் பேசுவதை மாற்றுக்கட்சியினர் பொருட்படுத்தாமல் கடந்துவிடுவர். ஆனால் சமூக ஊடகங்களில் அப்படி அல்ல. இப்படி ஏதாவது ஆபாசமாக இறங்கினால் பதிலுக்கு பிரித்து மேய்ந்து ஒரே இணைய அடிதடி. சைபர் கிரைமில் புகார் என்று நடக்கிறது,'' என்று சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் ஒருவர்.

நவம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com